Saturday, 28 November 2015

ஜோடிக் காகங்கள் தந்த அதிர்ஷ்டம்



தூங்கி எழுந்ததும் விடியற் காலையில் ஜோடியாக உள்ள காகங்களைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டார் பணக்காரர் ஒருவர். 

ஜோடிக் காகங்களைக் காலையில் எழுந்ததும் காணவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர், தன் வேலைக்காரரை அழைத்து, நீ விடியற் காலையில் ஜோடிக் காகங்களைப் பார்த்து வந்து என்னை எழுப்புஎன்று கூறினார். 

அவ்வேலைக்காரர், மறுநாள் விடியற் காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காகங்கள் இருப்பதைப் பார்த்தார், உடனே ஓடிச்சென்று தன் எஜமானை எழுப்பினார். அப்பணக்காரர் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும்பொழுது அங்கே ஒரு காகம் மட்டுமே இருந்தது. 

ஒரு காகத்தை மட்டும் பார்த்த பணக்காரர் கோபம் கொண்டு, மற்றொரு காகம் பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லைஎன்று சொல்லிக்கொண்டே வேலைக்காரரை அடித்தார். 

அப்போது அந்த வேலைக்காரரோ, எஜமானரே, விடியற்காலையில் ஜோடிக் காகங்களைப் பார்த்ததால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் நான் பெற்ற அதிர்ஷ்டம்என்று கூறினார். அதைக் கேட்ட பணக்காரர், தன் தவறை உணர்ந்து, அடிப்பதை நிறுத்தினார்.


No comments:

Post a Comment